மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் 
ஊக்கத் தொகை : தமிழக அரசு






மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.


தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment