அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண உடைகள்:
முதல்வர்   உத்தரவு

 தமிழகத்தில் செயல்படும் அங்கன்வாடிகளுக்கு, குழந்தைகள் வருவதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு ஜோடி வண்ண உடைகளும்; நவீன சமையலறைகளும் அமைக்க, 7.32 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: புகையில்லா சூழலை உருவாக்குதல், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கில், முதல்கட்டமாக, 16, 645 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளில், மாசற்ற சுற்றுச் சூழலுடன் கூடிய, "புகையில்லா சமையலறை' அமைக்க, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதன்படி, எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, புகையில்லா சமையலறைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இரண்டாம் கட்டமாக, இந்தாண்டில், 5,000 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளை நவீனமாக்கும் பணிகளை மேற்கொள்ள, 3.2 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு இருக்கிறது. அங்கன்வாடி மையங்களில், இரண்டு முதல், ஐந்து வயது வரை குழந்தைகள், பள்ளிசாரா முன் பருவக் கல்வி பெறுவதற்காக வருவதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு வண்ண உடைகள், இந்தாண்டு முதல் வழங்கப்படும். முதல் கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள, இரண்டு லட்சம் குழந்தைகள் பயனடையும் வகையில், 4.30 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment