பாளையில் பள்ளி வாகனத்தின் கதவு திறந்ததால் நடுரோட்டில் விழுந்த பிளஸ்-1 மாணவி படுகாயம்.

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் கிறிஸ்தவ போதகர். இவரது மகள் அக்ஷாய் இவாஞ்சல் (16). இவர் பாளை ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பள்ளிக்கு சொந்தமான வாகனத்திலேயே தினமும் பள்ளி சென்று வந்தார். இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. 

மாணவி அக்ஷாய் இவாஞ்சல் இன்று காலை பள்ளி வாகனத்தில் சென்றார். அவர் வந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமாக மாணவிகள் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் வந்த பள்ளி வாகனம் பாளை வண்ணார்பேட்டை பகுதியில் காலை 8 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளி வாகனத்தின் கதவு திடீரென திறந்தது. 
இதில் மாணவி அக்ஷாய் இவாஞ்சல் ஓடும் வாகனத்தில் இருந்து நடுரோட்டில் விழுந்தார்.


இதனைத்தொடர்ந்து பள்ளி வாகனத்தை டிரைவர் நிறுத்தினார். பள்ளி வாகனத்தில் இருந்து மாணவி நடுரோட்டில் விழுந்ததை அப்பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் ஏராளமானோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு, அவர் வந்த பள்ளி வாகனத்திலேயே அனுப்பி வைத்தனர்.

மாணவி அக்ஷாய் இவாஞ்சலினை பள்ளி வாகனத்தின் டிரைவரும் மற்ற மாணவிகளும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து பள்ளி வாகனத்துடன் டிரைவர் தலைமறைவாகிவிட்டார். பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த மாணவிக்கு தலை மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான ரத்தம் வெளியேறிவிட்டது. இதனால் அவருக்கு உடனடியாக தேவையான அளவு ரத்தம் ஏற்றப்பட்டது. இருந்த போதிலும் அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய பள்ளி வாகனத்தின் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி நடந்தன.

பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதி முறைகளை கடைபிடிக்காததே இதற்கு காரணம் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் சரியாக பின் பற்றப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் பல வாகனங்களில் விதிமுறைகள் கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனங்களின் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

நெல்லையிலும் பள்ளி வாகனங்கள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இருந்த போதிலும் போக்குவரத்து துறை விதித்த கட்டுப்பாடுகளை பெரும்பாலான பள்ளி வாகனங்களில் பின்பற்றப்படாமல் இருந்து வந்தது. 

தனியார் பள்ளி வாகனங்கள் பலவற்றில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆட்டோக்களை மட்டும் கண்காணித்து நடவடிக்கை எடுத்த அளவுக்கு, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாரும், போக்குவரத்து துறையினரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் ஓடும் வாகனத்தில் இருந்து பள்ளி மாணவி நடுரோட்டில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment