அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை "கல்வி அதிகாரிகள் நேரடியாக சஸ்பெண்டு செய்ய அதிகாரம் இல்லை" மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் நேரடியாக சஸ்பெண்டு செய்ய அதிகாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தனசேகரன். மோசடி குற்றச்சாட்டின் கீழ் இவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை 7.12.2012 அன்று சஸ்பெண்டு செய்து உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தனசேகரன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜராகி வாதாடினார்.
அதிகாரம் இல்லை
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் மனுதாரரை உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி சஸ்பெண்டு செய்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தில் தலையிட சில அதிகாரங்கள் மட்டுமே பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்விக்குழு இருக்கும் போது, ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்ய கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை.
பள்ளி கல்விக்குழுவில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு மாவட்ட கல்வி அதிகாரி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே சஸ்பெண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பள்ளிக்கல்விக்குழு காலியாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பள்ளிக்கல்விக்குழு காலியாக இருக்கும்பட்சத்தில் முறையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதுபோன்று எதுவும் செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில் மனுதாரரை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்தது சரியல்ல. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment