மே 12-ல் தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதம்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்தும், அது குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐ.நா. அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் மே 12-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும்.

இத்தகவலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் கூறினார்.
அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் துணைத் தலைவர் மு. மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் த. சுந்தரராசன், செயலர்கள் புகழேந்தி, முத்துராமன், இணைச் செயலர்கள் மா. இரவிக்குமார், ம. கணபதி, பெ. இராகவன் நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை அடுத்து முகுந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் நிலைநிறுத்தப்பட்டு, சம உரிமையுடன் வாழ வகை செய்யப்பட வேண்டும்; ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை;
அண்மையில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானமும் நீர்த்துப் போனதால், ஈழத் தமிழர்களுக்கு எந்த விடியலும் இல்லை.
தமிழீழம் குறித்து, இலங்கையில் வாழும் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இலங்கை குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. மன்றத்துக்கு அழுத்தம் தர வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை கூட்டமைப்பு பாராட்டுகிறது.
தேர்வாணைய பாடத்தில் தமிழ்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்த தேர்வு பாடத் திட்டத்தில் தமிழ் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டம் கிராமப்புற மாணவர்களுக்குத் தடையாக அமைவதால், முதல்வர் அதில் தனிக்கவனம் செலுத்தி, முந்தைய பாடத்திட்டத்தையே செயல்படுத்தவேண்டும்.
பல்வேறு தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் பெயரில் தமிழக அரசு அளிக்கும் விருதுகளை வழங்குவதில் பிற மாநிலங்கள், பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருக்குறளை தேசிய நூலாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment