மாணவர்கள் தீவிரவாத பாதையில் செல்வதை தடுக்க அறிவியல், தொழில்நுட்பக்கல்வி படிப்பில் கலை, சமூகவியல் பாடங்கள் கட்டாயம். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. அதிரடி உத்தரவு.

சென்னை. Mar. 2.
மாணவர்கள் தீவிரவாத பாதையில் செல்வதை தடுக்கும் வகையில், கல்லூரிகளில் அறிவியல், தொழில்நுட்பக்கல்வி படிப்புகளில் கலை, இலக்கியம், சமூகவியல் பாடங்களை கட்டாயமாக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் பரிந்துரை
நாட்டில் ஆங்காங்கே நடக்கும் வன்முறை சம்பவங்கள் மற்றும் குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் ஈடுபட்ட இளைஞர்களின் பின்னணியை தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், பெரும்பாலான இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பக்கல்வி சம்பந்தப்பட்ட படிப்புகள் படித்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இவ்வாறு அறிவியல், தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் தீவிரவாத பாதையில் செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில் கல்வி நிறுவனங்களில் பாடத்திட்ட அளவிலேயே தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யு.ஜி.சி.) தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் ஆலோசனை வழங்கியது.
கலை, சமூகவியல் பாடம் கட்டாயம்
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் ஆலோசனையை தொடர்ந்து, இது குறித்து விவாதிப்பதற்காக யு.ஜி.சி. கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம் வருமாறு:–
மனித உரிமைகள், மனித மதிப்பீடுகள் குறித்து மாணவ–மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் கண்டிப்பாக படிக்கும் வகையில் அவர்களின் பாடத்திட்டத்தில், கலை, சமூகவியல், இலக்கிய பாடங்களைச் சேர்க்க வேண்டும்.
மேற்கண்ட முடிவுகள் யு.ஜி.சி. கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
யு.ஜி.சி. அதிரடி உத்தரவு
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இளைஞர்கள் தீவிரபாதையில் செல்வதை தடுத்து நிறுத்தும் வண்ணம் கல்லூரிகளில் அறிவியல், தொழில்நுட்பக்கல்வி படிப்புக்கான பாடத்திட்டத்தில் கலை, அறிவியல் பாடங்களை கட்டாயமாக்க யு.ஜி.சி. முடிவு செய்துள்ளது. யு.ஜி.சி.யின் மேற்கண்ட முடிவுகளை அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. அதிரடி உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது.
இதற்கிடையே, யு.ஜி.சி.யின் இந்த உத்தரவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களும் எழுந்துள்ளன. இளைஞர்கள் தீவிரவாத பாதையில் செல்வதற்கு வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணம். இன்றைய சூழ்நிலையில், அறிவியல், தொழில்நுட்பப் படிப்புகளில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவ–மாணவிகள் சேருகிறார்கள். இதன் காரணமாக, இந்த படிப்புகளில் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
கல்வியாளர்கள் விமர்சனம்
எனவே, வன்முறை மற்றும் தீவிரவாத சம்பவங்களுக்கு காரணமான படித்த இளைஞர்கள் அறிவியல், தொழில்கல்வி பட்டதாரிகளாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதை யோசிக்காமல் சொல்லிவிடலாம். உலக அளவில் பார்த்தால் அறிவியல், தொழில்நுட்பம் படித்த பலர் சிறந்த மனிதநேயர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதேபோல், கலை, சமூகவியல், இலக்கியம் படித்த பலர் கொலைகாரர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் என்பதையும் மறுத்துவிட முடியாது என்பது கல்வியாளர்களின் வாதம். எனினும், கலை, இலக்கியம், அரசியல், பொருளாதார பாடங்களை படிப்பது மாணவர்களின் பார்வையை விசாலமாக்கும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை.

No comments:

Post a Comment