சென்னை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் ரூ.918 கோடியில் குடியிருப்புகள் : மதுரை அருகே துணை நகரம் - சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரையில் துணைக்கோள் நகரம்
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையைக், கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை– திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நலிவடைந்தபிரிவினருக்கும் ஒதுக்கீடு
இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில், 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த புதிய துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியவைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மேலும், இங்கு குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார வசதி, தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கே உருவாக்கப்படும். இந்தத் துணைக்கோள் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
சோழிங்கநல்லூரில் 10 மாடி குடியிருப்பு
இதே போன்று, சென்னைக்கு அருகிலுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கைவசம் உள்ள நிலத்தில் ‘முன்கட்டுமான தொழில் நுட்பம்‘ என்ற நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடியிருப்புகள் 10 மாடிகளை கொண்டதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்த வருவாய் பிரிவு, மத்திய தர வருவாய் பிரிவு, உயர் தர வருவாய் பிரிவினர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படும்.
காட்டுமான செலவு குறைவு
டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்த முன்கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானத்தின் காலம் 25 விழுக்காடு குறைவதோடு, கட்டுமானச் செலவும் 10 முதல் 15 விழுக்காடு வரை குறையும். கட்டட பாகங்களான, தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் தண்ணீர் மூலம் ‘கியூரிங்‘ செய்யப்பட்டு உறுதிபடுத்தப்படும்.
24 மாதத்தில் 24 மாடி கட்டிடம்
கட்டுமானப் பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் இயந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும். 24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடி கட்டிடங்களை இத்தொழில் நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டலாம். கட்டுமானப் பாகங்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுவதால் கட்டிடம் பார்ப்பதற்கு மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.
9 மாவட்டங்களில் சுயநிதி திட்டத்தில்...
இவை மட்டுமல்லாமல், சென்னை, காஞ்சீபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் 1,630 தனி வீடுகள் மற்றும் 2,792 அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 918 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்பதையும். மேலும் 32 மனைகள் மேம்படுத்தப்பட உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 7 இடங்களில் 13.80 ஏக்கர் நிலத்தில், 844 அடுக்குமாடி குடியிருப்புகள் 371 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் காஞ்சீபுரத்தில், இரண்டு இடங்களில் 22.70 ஏக்கர் நிலத்தில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 32 மேம்படுத்தப்படும் மனைகள் 303 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3.90 ஏக்கர் நிலத்தில் 344 அடுக்குமாடி குடியிருப்புகள் 50 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டத்தில், 2 இடங்களில் 12.15 ஏக்கர் நிலத்தில் 468 அடுக்குமாடி குடியிருப்புகள் 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
சேலம் மாவட்டத்தில் 36.20 ஏக்கர் நிலத்தில் 120 வீடுகள் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10.50 ஏக்கர் நிலத்தில் 258 அடுக்குமாடி குடியிருப்புகள் 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டத்தில் 3 இடங்களில் 32.50 ஏக்கர் நிலத்தில் 722 வீடுகள் 73 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் 1.03 ஏக்கர் நிலத்தில் 35 வீடுகள் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மற்றும் திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் 3.09 ஏக்கர் நிலத்தில் 104 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 27 வீடுகள், 25 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 4,454 அலகுகள், நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 24 மாதங்களில் முடிக்கப்படும்.
குடிசைமாற்று வாரியம் மூலம்
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம், இதுவரை, 1.29 லட்சம் குடியிருப்புகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், சுனாமியால் பாதிக்கப்பட்ட 6,620 வீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து குடியிருப்புகளும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாறுபட்ட தட்ப வெட்ப நிலை, குடியிருப்புகளை உபயோகித்தல், சுற்றுப்புற சூழல், அடுக்குமாடிக் குடியிருப்புகளில், குடியிருப்புதாரர்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், குடியிருப்புகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், போன்ற காரணங்களினால் பல குடியிருப்புகளின் கட்டமைப்புகள் மிகவும் பழுதடைந்து வலு குறைந்துள்ளன. இக்குடியிருப்புகளின் கட்டமைப்பு வலுவிழந்துள்ளதுடன் தளங்களில் உள்ள கம்பிகள் காற்றிலுள்ள உப்புத் தன்மை காரணமாக துருப்பிடித்துள்ளன.
புது வீடுகள் கட்டும் திட்டம்
இத்தகைய குடியிருப்புகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் மழைக் காலங்களில் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கான சராசரி ஆயுட் காலம் 70 ஆண்டுகள் என்றிருந்தாலும், பெரும்பாலான குடியிருப்புகள் வலு குறைந்து அவற்றின் ஆயுட் காலம் முடியும் முன்னரே தகுதியற்றவைகளாக ஆகிவிடுகின்றன. எனவே, வலுவிழந்த கட்டடங்களை இடித்துவிட்டு புது வீடுகள் கட்ட எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
3500 அடுக்கு மாடி குடியிருப்புகள்
இதன் முதற்கட்டமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மிகவும் பழுதடைந்த 3,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 2013–2014 ஆம் ஆண்டில் மீண்டும் 3,500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் 280 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ரெங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் 480 குடியிருப்புகளும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கீழ் 120 குடியிருப்புகளும், பெரம்பூர் தொகுதியில், சத்தியவாணி முத்துநகர் திட்டத்தின் கீழ் 392 குடியிருப்புகளும், எழும்பூர் தொகுதியில் நேரு பார்க் திட்டத்தின் கீழ் 288 குடியிருப்புகளும், பிள்ளையார் கோவில் தெரு திட்டத்தின் கீழ் 32 குடியிருப்புகளும் கட்டப்படும்.
சேப்பாக்கம் தொகுதியில்
சேப்பாக்கம் தொகுதியில் லாக் நகர் (நாவலர் நகர்) திட்டத்தின் கீழ் 304 குடியிருப்புகளும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் 708 குடியிருப்புகளும், சைதாப்பேட்டை தொகுதியில் கோட்டூர்புரம் திட்டத்தின் கீழ் 136 குடியிருப்புகளும், மைலாப்பூர் தொகுதியில் ஆண்டிமான்ய தோட்டம் திட்டத்தின் கீழ் 42 குடியிருப்புகளும், பல்லக்குமான்யம் திட்டத்தின் கீழ் 48 குடியிருப்புகளும் கட்டப்படும்.
கோவை, திருச்சி, நாகை மாவட்டங்களில்
இதேபோல், கோவை மாவட்டத்தில் ஆடுதொட்டி திட்டத்தின் கீழ் 246 குடியிருப்புகளும், திருச்சி மாவட்டம் திருச்சி – பீச்சான்குளம் திட்டத்தின் கீழ் 587 குடியிருப்புகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை கூடைமுடைவோர் காலனி திட்டத்தின் கீழ் 117 குடியிருப்புகளும் என ஆக மொத்தம் 3,500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்காணும் அரசின் நடவடிக்கைகள் தமிழக மக்களின் வீட்டுவசதித் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment