வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாற்றில் மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு.


சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி) கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவுப்பூங்கா அமைக்கப்பட்டு, சுற்றுலாத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் சூழலில், கயத்தாற்றில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
இதைத் தொடர்ந்து, துணை கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜூ, மணி மண்டபம் அமைத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே, அந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இந்தக் கோரிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துக் கூறி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
முதல்வர் அறிவிப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பதிலளித்த போது, பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இருந்தார். உடனடியாக அவர் எழுந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியது:-
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நமது நாட்டின் உண்மையான முதல் சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் தான். அவருடைய தேச பக்தி, அவருடைய தியாகம் யாராலும் மறுக்க முடியாதவை. ஆகவே, அவரது நினைவப் போற்றும் வகையில், கயத்தாற்றில் தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தை எழுப்பும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கோவில்பட்டி எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆறுமுகம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்புத் தெரிவித்தன.

No comments:

Post a Comment