சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகள்.


பொள்ளாச்சி:"பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், சுற்றுச்சுவர் வசதியில்லாத கிராமப்புற பள்ளிகளுக்கு கோடை விடுமுறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு உட்பட்டு 500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள இப்பள்ளிகளில், பெரும்பாலனவற்றுக்கு போதிய சுற்றுச்சுவர் வசதி இல்லை. விடுமுறை நாட்களில், பள்ளி வளாகத்திற்குள் "குடிமகன்'கள் அத்துமீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையின் போது பள்ளிகள் பூட்டியிருக்கும். இதனால், சமூக விரோத செயல்களும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. "கிராமங்களில் உள்ள பல பள்ளிகள் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி வெளி நபர்கள் நுழையாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர், கல்வியாளர்கள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிகளில் பாதுகாப்பு வசதியைமேம்படுத்தும் வகையில், சுற்றுச்சுவர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளுக்கு, கடந்த கல்வியாண்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சுவர் ஏறி பள்ளிக்குள் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.இதை தவிர்க்க, அந்தந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களை கொண்டு விடுமுறை நாட்களில் பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீசிடமும் இது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி சார்பில், வெளியாட்கள் நுழைய எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் இரவு காவலர்கள் நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர். 

No comments:

Post a Comment