தேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு.


காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் என்ற கோவிந்த ராஜூலு. முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி பல இடங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. மிகவும் புனிதமான இந்த கொடியை வியாபார நோக்கில் காதல் சின்னமான இதய வடிவத்திலும், வானவில் போன்றும் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இது சட்டப்படி தவறு. தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயலாகும்.வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்கப்படும் இத்தகைய செயலை தடை செய்யுமாறு கடந்த 16.11.2011 அன்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் கொடுத்தேன்.ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணா ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில்,தேசிய கொடியை வடிவம் மாற்றி விற்பனை செய்வது தவறு என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment