போர் நினைவுச் சின்னத்தில் முதல் முறையாக அஞ்சலி.

திருச்சி காந்தி மார்க்கெட்டிலுள்ள முதல் உலகப் போர் நினைவுச் சின்னத்தில் முதல் முறையாக நாட்டின் சுதந்திர தினத்தில் ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முதல் உலகப்போர் நடைபெற்றபோது, திருச்சி நகரில் இருந்து 302 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அதில் 41 பேர் வீரமரணம் எய்தினர். இதன் நினைவாக, திருச்சி காந்தி மார்க்கெட் எதிரில், நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

“மணிக்கூண்டு’ என்ற அளவில் மட்டுமே அழைக்கப்பட்டு வந்த இந்த இடத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகளும் முளைத்ததால், அடையாளம் இழந்த நிலை காணப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றியிருந்த கடைகள் அகற்றப்பட்டன.
மணிக்கூண்டுடன் போர் நினைவுச் சின்னமும் வெளியே பொதுமக்களின் பார்வையில் முழுமையாகத் தெரியத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, சுதந்திர நாளையொட்டி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் இங்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் சோ. செல்வமூர்த்தி உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.
“எனக்குத் தெரிந்து கடந்த 40 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் உலகப்போர் நினைவுச் சின்னத்தில் சுதந்திர நாள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது’ என்றார் சோ. செல்வமூர்த்தி.

No comments:

Post a Comment